Sunday, April 24, 2016

வாதம்-பித்தம் -கபம்


”எதைத் தின்னால் இந்த ’பித்தம்’ தெளியும்? ஒருவேளை ’வாதக்’க் குடைச்சலாய் இருக்குமோ? நெஞ்சில் ’கபம்’ கட்டியிருக்கு...”,என்கிற வசனங்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாய் வழக்கொழிந்து வருகிறது. ஆனால், நம் மூத்த தலைமுறையில் இவ்வரிகள் ரொம்ப முக்கியமானவை. இன்னும்கூட நம் பாட்டி தாத்தா இப்படிப் பேசிக் கொள்வதை, கிராமங்களில் மருத்துவரிடம் தம் நோயை அவர்கள் இப்படிச் சொல்வதை பார்க்க முடியும். நாகரீக அனாதைகளாகி வரும் இளையதலைமுறையான, இன்றைய ’கூகிள்’ தலைமுறைக்கு, இது புதுசு. லூலூபி பாடுவதில் இருந்து, வெண்பொங்கலுக்கு மிளகை எப்போ போடணும்?, மயிலாப்பூர்ல ஏழு சுத்து கை முறுக்கு எங்கே கிடைக்கும் –ங்கிற வரை எல்லாத்தையுமே கம்ப்யூட்டரில் தேடும் அவர்கட்கு இந்த ”வாதம் பித்தம் கபம்” எனும் வார்த்தைகள்- வரிவிலக்கு பெற்று வந்திருக்கும் தமிழ்ப் பட டைட்டிலோ என்று மட்டுமே யோசிக்க வைக்கும்.

”வாதம், பித்தம், கபம்” -அல்லது ”வளி, அழல், ஐயம்” என்னும் மூன்று விஷயங்களும் நம்ம பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொரு அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. அப்ப அதல்லாம் சித்தா ஆயுர்வேத டாக்டர்கள் சமாச்சாரமாச்சே.. நமக்கெதுக்கு? என நகர வேண்டாம். இந்த வாத பித்தம் கபம் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். முன்பு இருந்திருந்தது. ”ஐய்யோ..ஐஸ்கிரீமா? த்ரோட் இன்ஃபெக்‌ஷனாயிடும்! ரோட்டோர பரோட்டாவா..அமீபியாஸிஸ் வந்துடப் போகுது,” என்ற அறிவை வளர்க்கும் நாம், “உருளைக்கிழங்கு போண்டா நமக்கு வேண்டா. அது வாயு கொடுக்கும். வாதக் குடைச்சல் வந்துடும். மழை நேரத்தில தர்பூசணி எதுக்கு கபம் கட்டிக்க போகுது”-என்கிற மாதிரியான நம் தினசரி உணவும் அது அதிகரிக்க அல்லது குறைக்க வைக்கும் உடலின் இந்த மூன்று முக்கிய விஷயங்கள் குறித்த அறிவும் தெரிந்திருக்க வேண்டும். அந்த அறிவை இந்த வாரம் கொஞ்சம் இப்படி தீட்டுவோமா?.
”முத்தாது” என்று தமிழ் சித்தத்திலும் ”த்ரீதோஷா” என்றூ ஆயுர்வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயத்தை தான் ”மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் தொகுத்த வளி முதலாய மூன்று”- என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளும். பித்தம், தன் வெப்பத்தால் உடலை காப்பது. இரத்த ஓட்டம், மன ஓட்டம், சீரண சுரப்புகள், நாளமில்லா சுரப்புகள் - போன்ற அனைத்தையும் செய்வது. கபம் உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து எல்லா பணியையும் தடையின்றி செய்ய உதவியாய் இருப்பது. இந்த மூன்று வாத பித்த கபமும் சரியான கூட்டணியாய் பணிபுரிந்தால் உடம்பு எனும் பார்லிமெண்ட் ஒழுங்காய் நடக்கும். ஒண்ணு ”காமன் வெல்த்”திலும்-இன்னொன்று அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் சேட்டை செய்தால்- ஒரே நோய்களின் கூச்சலும் குழப்பமும் தான் உடம்பு பார்லிமெண்ட்டில் ஓடும்.

இந்தக் கூட்டணி ஒழுங்காய் வேலை செய்ய உணவு, ரொம்ப முக்கியம். மனமும் பணியும் கூட கூட்டணிப் பணிக்கு அவசியமானது. ஒருவருக்கு மூட்டு வலி உள்ளது. கழுத்துவலி எனும் ஸ்பாண்டிலைஸிஸ் உள்ளதென்றால், வாதம் சீர் கெட்டு உள்ளது என்று பொருள். இந்த வியாதிக்காரர்கள் வாதத்தை குறைக்கும் உணவை சாப்பிட வேண்டும். வாதத்தைக் கூட்டும் உணவை காசியில் விட்டு விடலாம். புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமனத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாதத்தைக் கூட்டும். மூட்டுவலிக்காரர், மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமாவில் அதிகம் அவதிப்படுவோர் இந்த உணவைக் கூடியவரை தவிர்க்க வேண்டும். வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், மடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், இதனை உனவ்பில் சேர்ப்பது வாத்தை குறைத்திட உதவும்.

பித்தம் அதிகரித்தால் அசீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னை வரக் கூடும். அல்சர், இரத்தக்கொதிப்பு, ஆரம்பநிலை மதுமேகம் என பித்த நோய் பட்டியல் பெரிசு. இன்றைய நவீன வேகமான வாழ்வியலில் பெருகும் பல நோய்க்கு இந்த பித்தம் ஒரு முக்கிய காரணம். நாம் தான் இப்போது மனசை கல்லில் அடித்து துவைச்சு காயப் போடும் வேகத்தை தானே விரும்புகிறோம்! பித்தம் அதிலும் அதிகம் வளர்கிறது. பித்தம் குறைக்க உணவில் காரத்தை எண்ணெயை குறைக்க வேண்டும் கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட, அதிகம் சேர்த்தால் பித்தம் கூட்டம். அரிசி அந்த விஷயத்தில் சமத்து.(என்ன கொஞ்சம் அளவோடு அரிசியின் சட்டையை அதிகம் கழட்டாமல்(கைக்குத்தல்) சாப்பிடணும்). கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என் இவையெல்லாம் பித்தம் தணிக்கும். பித்தம் குறைக்க கிச்சன் கவனம் மட்டும் போதாது. மனம் குதூகலமாய் இருப்பது அவசியம். இன்றைக்கு சர்க்கரை வியாதி பெருக பலரும் அதிக அரிசி உணவைக் காரனமாய்ச் சொல்கிறோம். அளவுக்கதிகமான மனப்பழு, மனஅழுத்தம் தான் அதைவிட முக்கியக் காரணமாகப் படுகிறது.

ஆதலால் சந்தோஷம் கால்படி, சிரிப்பு அரைப்படி போட்டு, அதில் கண்டிப்பாய்“ நான்”-கிள்ளி நீக்கிப் போட்டு, விட்டுக்கொடுத்தலில் வேகவைத்து புன்னகையில் தாளித்தெடுத்து காதலோடு பரிமாறுங்கள். பித்தமென்ன மொத்தமும் அடங்கும்.

அடுத்து கபம். சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பில் இருந்து கபத்தால் வரும் நோய்கள் நிறைய. பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள். மழைக்காலத்திலும், கோடைக் காலத்தில் கபநேரமான அதிகாலை மற்றும் இரவுநேரங்களில் தவிர்க்கலாம். மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை- என இவையெல்லாம் கபம் போக்க உதவும். தும்மிக்கொண்டே வரும் வீட்டுக்காரருக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல் அன்றிரவின் தூக்கத்தைக் கெடுக்காது.

வாத பித்த கபம்-இந்த மூன்று வார்த்தை மந்திரக் கூட்டணியை அச்சுபிச்சு இல்லாமல் காப்பதில், சமையல்கூடத்திற்கு சந்தேகமில்லாமல் பங்கு உண்டு.அதற்கு பாரம்பரிய அனுபவம் அவசியம். பாரம்பரிய அனுபவங்கள் பாரம்பரிய சொத்தைக் காட்டிலும் பலம் பொருந்தியவை. அதனை மடமை என்றோ பழசு என்றோ ஒதுக்குவது முட்டாள்தனம். அங்கே இங்கே தவறுகள் சேர்ந்திருக்கும். ஆனால் இன்று சந்தையைக் குறிவைத்து ”2020-இல் இந்த நோயை உருவாக்க வேண்டும். அப்பொது இந்த மருந்தை இங்கு விற்கலாம்,’ என திட்டமிடும் கேவலமான எண்ணங்கள் கண்டிப்பாய் அப்போது கிடையாது. இதை புரிந்து பாரம்பரிய அறிவை கவனமாய் பாதுகாப்போம். அது நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும்!

Thursday, April 7, 2016

குளியல்

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.

அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!

மாத மளிகை பட்டியலில் சோப்பு டப்பாவை வாங்கி அடுக்கி வைத்து கொள்கிறோம்.

சோப்பு எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா... கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடலில் திட்டு திட்டாக ஆயில் படிந்துவிடும்.

இந்த கடின எண்ணெய்யை நீக்குவதற்காக சோப்பு பயண்படுத்தினார்கள். கப்பலில் மட்டும் அல்ல எண்ணெய் புழங்கும் மற்ற இடங்களிலும் கூட இது பயன்பட்டது.

சோப்பு போடுவதற்கு நாம் எந்த கப்பலில் வேலை பார்த்தோம். எந்த சேறு, சகதி எண்ணெய்க்குள் புரண்டு எழுந்து வந்தோம்.

வணிக பெருமுதலை கும்பல் சும்மா இருப்பார்களா, ஆயிலில் புரண்டெழுந்து வேலை செய்வோர் மட்டுமே பயண்படுத்தி வந்த இந்த சோப்பை,

எல்லோரும் பயண்படுத்தும் படி பல திட்டம் தீட்டி. கிருமி உருவாக்கி, அதன் மேல் பயம் உருவாக்கி.
நடிகர்களை நடிக்க விட்டு. நம் தலையில் கட்டிவிட்டார்கள்.

இதன் மூலம் என்ன ஆனது..

சோப்பு போட்டு நம் தோல்களின் மேல் இயற்கையாக உருவாகும் மெல்லிய பாதுகாப்பு கொழுப்பு படலத்தை நீக்கி விட்டேம், இப்பொழுது பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது. இதை திரும்ப சீர் செய்யவே உடல் பெரும்பாடுபடுகிறது.

நமக்கு வாய் முகத்தில் மட்டும் அல்ல தோலின் மேல் இருக்கும் ஒவ்வொறு வியர்வை துவாரங்களும் வாயே. சோப்பை போடுவதன் மூலம் வியர்வை துவாரம் வழியே இரசாயண நச்சு இரத்தத்தில் கலந்து கல்லீரலை பாதிக்கிறது.

சோப்பு போடுவதன் மூலம் தோல் மூலமாக நம் உடல் கிரகிக்கும் பிரபஞ்ச சக்தி தடுக்கப்படுகிறது.

இன்னும் இதன் தீமைகள் பல உண்டு. சொல்லி மாளாது.

நாம் சோப்பு போடுவதற்கு எந்த சேறு, சகதி, எண்ணெய் இயந்திரங்களுக்குள் புரண்டு வருவதில்லை.

சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?

குளியல் = குளிர்வித்தல்

குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது.

மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.

இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும்.

காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.

வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.

குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.

நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.

எதற்கு இப்படி. காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.

நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருங்கள்.

குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.

இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா. உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.

எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மேலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.

வியக்கவைக்கிறதா... !  நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.

அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% சத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக்கொள்ளும்.

பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.

புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.

குளியலில் இத்தனை விடையங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஸ்சேம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.

குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்

குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.

குளித்தல் = குளிர்வித்தல்

குளியல் அழுக்கை நீக்க அல்ல

உடலை குளிர்விக்க.

இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.

நலம் நம் கையில்

நன்றி

DoctorEmmanuel.blogspot.in