Saturday, December 12, 2015

வெள்ளம் வடிந்து விட்டது - இப்போது என்ன செய்ய?

ஏறத்தாழ ஒரு மாத காலமாக வெயில் உரைக்காத சூழல் சென்னையில் உள்ளது. மழை, வெள்ளம், புயல் ஆகியவற்றைவிட இந்தப் பருவநிலை கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது. போதுமான வெப்பம் வானிலிருந்து இறங்கும்போதுதான் உயிர்ச் சூழல் பாதுகாப்பு உறுதியடையும். இப்போதை சென்னை பருவநிலை, முரண்பாடுகள் நிறைந்தது.
சென்னையின் பெரும்பாலான வீடுகளின் கழிவுநீர் இப்போது சாலைகளிலும் தெருக்களிலும்தான் ஓடுகிறது. குப்பைகளின் அளவை மதிப்பிடவே முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆற்றோரங்களில் அவ்வப்போது சேரும் மனிதர்கள், விலங்குகளின் உடல்கள், தேங்கி நிற்கும் சாக்கடை நீர் ஆகியவை சென்னையில் கழிவு நுண்ணுயிரிகளின் பெருக்கத்தைப் பன்மடங்கு உயர்த்திக்கொண்டுள்ளன.
இந்த நிலை மாற வேண்டுமானால், தொடர்ந்து சில நாட்களுக்கு வெயில் உரைக்க வேண்டும். இதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆனால், அடுத்த சில நாட்களுக்கு வெயில் அடிப்பதற்கான சூழல் தென்படவில்லை.
இந்த நிலையில், இயற்கை வழி உடல்நலப் பாதுகாப்பிற்கென சில வழிகாட்டுதல்களை முன்வைக்கிறேன்.
1. சென்னையில் கிடைக்கும் எந்த நீராக இருந்தாலும் நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கிய பின்னர், சிறிதளவு சீரகம், மிளகு சேர்த்து மூடி வைத்துவிடுங்கள். சீரகம், மிளகின் சாரம் கொதிநீரில் இறங்கும். அதன் பின்னர் பருகுங்கள். சில நாட்களுக்கு இதுவே குடிநீராக இருத்தல் நலம். கடையில் வாங்கும் நீர், சுத்திகரிப்பு எந்திர நீர் (RO WATER) போன்றவற்றையும் இந்த முறைக்கு மாற்றுவதே சரியானது.
2. நன்றாகப் பசிக்கும் வரை காத்திருந்து, உணவு உட்கொள்ள வேண்டும். செரிமானத்திற்கு ஏதுவான உணவு வகைகளை மட்டுமே சேர்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக, கீரை வகைகளை மிகவும் குறைவாக உட்கொள்ளுங்கள். பால் அருந்துவதைச் சில் நாட்களுக்கு நிறுத்தினாலும் நல்லது.
3. குடும்பத்தினர் அனைவரும் இரவில், ஒத்தடம் கொடுத்துக் கொள்ளுங்கள். துணியை மடித்து நெருப்பில் காட்டி சூடேற்றி, அதை உள்ளங்கால்களிலும், உள்ளங்கைகளிலும் ஒத்தி எடுக்க வேண்டும். இது மிகவும் தேவையான செயல்முறை என்பது என் கருத்து.
4. கொசுவலைகளைப் பயன்படுத்துங்கள். கொசுக் கொல்லிகளை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். கொசுக்கொல்லிகளின் புகை, மணம் நஞ்சு கலந்தது. இப்போதைய சென்னை ஈரப்பதத்தில் இந்த புகையும் மணமும் சுவாசச் சீர்கேடுகளை அதிகரிக்கச் செய்யும்.
5. சேற்றுப் புண்களுக்கு எந்தவிதமான நவீன மருந்தும் பயன்படுத்தாதீர்கள். மஞ்சள் பூசினாலே புண்கள் ஆறும்.
6. குழந்தைகளைக் கதகதப்பான சூழலில் வைத்திருங்கள்.
7. ஏதேனும் ஒரு இரசம் (soup) மாலை நேரத்தில் பருகுவது, உடலின் வெப்பநிலையைப் பராமரிக்க உதவும். இரசத்தில் உள்ள மிளகு, பூண்டு, சீரகம் ஆகிய மூன்றும் உடலின் பருவநிலையைச் சீராக்கும் அருமருந்துகள்.
8.மல்லி விதைகளை வறுத்து, கொதிக்க வைத்து பனை வெல்லம் சேர்த்தால் அதன் பெயர் மல்லி நீர். காலை, மாலை மல்லி நீர் அருந்துவது வயிற்றுச் செயல்பாடுகளை முறைப்படுத்த உதவும்.
9. காய்ச்சல், சளி போன்ற உடல்நிலை மாற்றங்களைக் கண்டு அஞ்சாதீர்கள். காய்ச்சலும் சளியும் உடலைப் பாதுகாக்கும் இயற்கைச் செயல்முறைகள்தான். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு எனது முந்தைய கட்டுரைகளைப் படித்துப் புரிந்துகொள்ளுங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக,
பேருந்துகள் இயங்குவதையும், அலுவலகங்கள் செயல்படுவதையும் காட்டி, ‘சென்னை இயல்புநிலைக்குத் திரும்புகிறது’ என்று முழங்கும் குரல்களைக் கடந்து உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். இயல்புநிலை என்பது இயற்கையால் தீர்மானிக்கப்படுவது, மனிதத் தொழில்நுட்பங்களால் அல்ல. எப்போது சென்னயில் தொடர்ந்து வெயில் அடிக்க்கிறதோ அப்போதுதான் இயல்புநிலை திரும்பத் துவங்கும்.

நன்றி : Sridhar duraisamy

No comments:

Post a Comment