SHARING AN ARTICLE I READ :
கிணற்றில் மறைந்த நீர் கின்லேவில் பொங்குவது எப்படி ?
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் குடிநீருக்காக தவிக்கின்றன. சாரல் விழும் குற்றாலம் முதல் ஈரப்புகை கக்கும் ஒகேனக்கல் வரை சுற்றுலா கண்களுக்கு நிறையும் நீர் அதே மாவட்டத்தின் சுற்றுப்புறப் பகுதிகளின் தாகத்தை தீர்க்க அகப்படுவதில்லை. இயற்கையின் பொது உடைமையான நீர், இயற்கை விதிப்படியே பள்ளத்தை நோக்கி பாயாமல் மேடு நோக்கிப் போகும் மர்மத்தை மக்கள் சிந்திக்க இயலா வண்ணம் நெருக்கடிக்குள் தள்ளப்படுகிறார்கள் .
ஆதி மனிதனின் வேட்டை போல காலிக்குடங்களை தூக்கிக்கொண்டு எந்தப்பக்கம் தண்ணீர் எடுக்கப் போவது என்பது அன்றாட வாழ்க்கையின் காட்சியாகிவிட்டது. மக்கள் தீவிரமாகப் போராடும் அடித்தள பகுதிகளுக்கு மட்டும் குழாயில் அடித்து எடுக்கும் படி சிறிது தண்ணி காட்டி விட்டு, பல பகுதிகளுக்கு இழுத்தடித்து மக்களின் கோபத்தீயை தணிக்குமளவுக்கு தண்ணீர் ஊற்றுவது என நகராட்சிகள், மாநகராட்சிகள் திட்டமிட்டுக் கொள்கின்றன.
‘இரண்டு நாளா தண்ணி இல்ல, தண்ணிவுட்டாத்தான் போவோம்” என்று முற்றுகையிடும் மக்களிடம் “நாங்க என்ன பண்றது? தண்ணியே இல்லங்க, சரியா மழையும் பெய்யல என்ன பண்றது? சரி, சரி ஏற்பாடு பண்றோம் !” என்று பருவமழையின் மீது பழியை போட்டுவிட்டு தந்திரப் பேச்சில் தப்பிக்கிறது அதிகார வர்க்கம்.
எதிர்த்து மோதி மோதி களைப்படைந்த மக்கள் மெல்ல மெல்ல எல்லா காலத்திலும் அந்தந்தப் பகுதியின் நீர் மாஃபியாக்களின் மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ற மாதிரி குடம் ஐந்து, ஆறு, பத்து என்ற விலையில் கூட வாங்க பழக்கப்படுத்தப்படுகிறார்கள். வேறு என்ன செய்வது? “இனி காசுக்குத்தான் தண்ணீர்” என்ற அரசின் அடக்குமுறை மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய எதார்த்தமாக பரப்படுகிறது.
உண்மையில் தண்ணீர் இல்லையா? இல்லை யாருக்கு மட்டும் தண்ணீர் இல்லை? என்பதை சமுதாயத்தில் நிலவும் உண்மையிலிருந்து உணர்ந்தால், இது தண்ணீர் பஞ்சமல்ல, தனியார்மய கொள்ளை என்பது புரியவரும். நம் முன்னோர்கள் நெல்லையும், புல்லையும் மட்டும் அறுவடை செய்தவர்கள் என்பது மட்டுமல்ல, நீரையும் அறுவடை செய்து ஏரி, குளம், குட்டை என பல வடிவங்களில் சேகரித்து வந்தனர். வளர்ச்சி என்ற பெயரில் எல்லா மாவட்டங்களிலும் ஏரிகளையே ஏப்பம் விட்ட அரசும் ஆளும் வர்க்கமும், எஞ்சிய ஆற்று மணலின் ஊற்றுக் கண்ணையும் குருடாக்கிவிட்டு, தனியாருக்கு நதிகளை தாரை வார்த்து விட்டு இயற்கையின் மீதே பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கின்றன.
பெய்யும் மழையும் பெப்சிக்கும், கோக்குக்கும் என எழுதி வைத்துவிட்ட நாட்டில் ஏழைகளுக்கு எது மிஞ்சும்? “செம்புலப் பெயல் நீர் போல்” அரசின் அன்புடை நெஞ்சம்தான் கலந்த தனியார் மயத்தால் வந்த துயரம் இது.
சரி, இவர்களின் கூற்றுப்படியே பருவமழைதான் காரணம் எனில், அதன் பாதிப்பு எப்போதும் ஏழைகளுக்கு மட்டுமேயாக இருப்பதன் காரணம் என்ன ?
சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு அய்ம்பது லட்சம் லிட்டர் தண்ணீரை நட்சத்திர விடுதிகள் உறிஞ்சுகிறது. பல லட்சம் ஏழை மக்களின் சமையல் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்ய உதவும் இந்த தண்ணீரை சந்தைப் பொருளாக்கி ஏழைகளின் கையிலிருந்து தட்டிப்பறிக்கிறது தனியார் மயம். இதற்கு ‘தண்ணி மாமாவாக’ தரகு வேலை பார்க்கிறது அதிகாரவர்க்கமும், அரசும்.
ஒரு குடம் தண்ணீருக்காக ஆணும், பெண்ணும் அலைக்கழிக்கப்படும் இந்த நாட்டில்தான், ஆயிரக்கணக்கான பணத்திமிலங்களின் நீச்சல் குளங்களுக்கு நெட்டித் தள்ளப்படுகிறது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர். நாடு முழுக்க இப்படி நீச்சல் குளங்கள், கோல்ஃப் மைதானஙகள், கிரிக்கெட் மைதானங்கள், தீம் பார்க்குகள், இயற்கையின் மீதும், இந்த நாட்டின் மீதும், நன்றியில்லாத முதலாளிகள், அரசியல்வாதிகள் வீட்டு நாய் குளிப்பது என்று புழங்கப்படும் நீரின் அளவைக் கணக்கிட்டால், “தவிக்குதே தவிக்குதே!” நூலாசிரியர் பாரதிதம்பி சொல்வதுபோல, ஒரு போகம் குறுவை சாகுபடிக்கு உதவலாம். இந்த லட்சணத்தில், பிறக்கப்போகும் குழந்தையை தனது பனிக்குடத்திலேயே பாதி கழுவிக்கொள்ளும் ஏழைகளைப்பார்த்து “தண்ணீர் சிக்கனம்.. தேவை இக்கணம்” என்று தலைக்கனத்தோடு அறிவுரை சொல்கிறது அதிகாரவர்க்கம்.
தண்ணீர் ஏழைகளுக்கு இல்லை, காசுள்ளவனுக்குத்தான் என்ற தனியார்மய மனுநீதி அத்தோடு நிற்பதில்லை, உழைக்கும் வர்க்கத்தின் பயன்பாட்டிற்கும், இந்த நாட்டின் சுயதேவை உற்ப்பத்திக்கும்,சுய தொழிலுக்கும் கூட இனி தண்ணீர் கிடையாது. மாறாக பன்னாட்டுக் கம்பெனிகளின் – கார்ப்பரேட்டுகளின் ஏற்றுமதி சேவைக்கும், நுகர்வுமய சந்தைக்கும் என்பதும் இன்னொரு நீதியாகிவிட்டது.
சைக்கிள் கடை வைத்திருபவருக்கு பஞ்சர் பார்க்க ஒரு குடம் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இந்த நாட்டில்தான், ஹூண்டாயோ, நிசானோ ஒரு கார் தயாரிக்க 3.5 லட்சம் லிட்டர் தண்ணீரை அரசு தாராளமாக கொடுக்கிறது. இதற்குப் பெயர்தான் தண்ணீர் தட்டுப்பாடா? தனியார்மய தாராளமய கட்டுப்பாடா? நம்ம ஊர் பிச்சிப்பூவுக்கு ஒரு குடம் தண்ணீர் இல்லை, பன்னாட்டு மிட்சுபிசிக்கு பல லட்சம் லிட்டர் கிடைக்கிறது என்றால், இங்கு தண்ணீர் இல்லை என்பதை நம்ப முடியுமா? உள்நாட்டு உழைக்கும் மக்களுக்கு தண்ணீர் தடை என்பதுதான் உண்மை.
வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பனியன், ஜட்டி, தோலாடைகள் என பலவும் பல்லாயிரம் லிட்டர் தண்ணீரை விழுங்கிக்கொண்டு செல்கின்றன; நமது பாலாறும், நொய்யலாறும் சாயக்கழிவில் தோல் உரிந்து கிடக்கின்றன. வருவாய் முதலாளிகளுக்கு பல நோய் மக்களுக்கு.
வெளிநாட்டுக்காரன் அணியும் உள்ளாடைக்கு ஈரம் கசியும் அரசின் இதயம், தாய்நாட்டின் விவசாயத்தின் மீது நெருப்பை உமிழ்கிறது என்றால் இது யாருக்கான அரசு என்பது தண்ணீரிலும் தெளிவாக தெரிகிறது.
காலிக்குடங்களுடன் போராட்டம், சாலைமறியல், முற்றுகை என போராடும் மக்களை தந்திரமாகவும், தடியடியாகவும் ஆளும், அதிகார வர்க்கம் ஏமாற்றும் போதெல்லாம், போராடும் மக்கள் நம்பத் தயாராக இல்லை, “எங்கள் தெருவில்தான் தண்ணி இல்லை இதோ அந்த நகரில் உள்ளது, அந்த பங்களாவில் உள்ளது” என்று சிதைந்த வடிவிலான வர்க்க உண்மைகளை அடையாளம் காட்டுகிறார்கள்.
கண்ணுக்குத் தெரிந்த உண்மைகளை இன்னும் தெளிவாக பேசலாம், ஊரில் மக்களுக்கு தண்ணி இல்லை, ஊரில் உள்ள கடைகளில் எத்தனை லோடு வேண்டுமானாலும் பெப்சி, கோக், அக்குவாபினா முதல் அம்மா வாட்டர் வரை இருக்கிறதே அது மட்டும் எப்படி? கிணத்தில் தண்ணீர் இல்லை, கின்லேவில் இருக்கிறதே எப்படி? என்று சிந்தனையை தூர்வாரினால் அரசியல் உண்மை சுரக்கும், நமது ஊற்றுக்கண்களை அடைத்துக்கொண்டிருப்பது தனியார் மய கும்பி என்பது புரியவரும். சும்மா வாட்டரை ஒழித்துவிட்டு அம்மா வாட்டர் காசுக்கு எதற்கு என்ற நியாயமும் பிறக்கும்! இயற்கையில் நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட நீர் சந்தையில் புட்டி, புட்டியாக காசுக்கு விற்க அடைக்கப்பட்டிருக்கிறது.
தண்ணீர் இல்லாமல் இல்லை, காசில்லாதவனுக்குத்தான் இல்லை என்ற உண்மையை உணர நமக்குத்தேவை போதி மரமில்லை, ஒரு தனியார்மய தண்ணீர் பாட்டிலே போதும், நிலம், கடல், மலை, நீர் ஆகிய அனைத்து இயற்கையையும் நம்மிடமிருந்து பறிக்கிறது தனியார் மயம்- தாராளமயம்.
“பறிமுதல்காரர்களை பறிமுதல் செய்கிறது புரட்சி” என்றார் கார்ல் மார்க்ஸ். இந்த அரமைப்பைபே பறிமுதல் செய்ய வேண்டியது என்பதுதான் நாம் நியாயமாக வந்தடைய வேண்டிய முடிவு. ஒரு வாய் தண்ணீர் தரக்கூட வக்கற்று ஆளும் தகுதியற்ற இந்த அரசமைப்பை ஒழிக்கும் சிந்தனை சுரந்தால் தானே தண்ணீர் கிடைக்கும்! ‘வறட்சியின் அரசியலை புரிந்து கொள்ளும் போது மக்களின் தாகம் தண்ணீரோடு மட்டும் தணிவதில்லைதனே!’.
– துரை.சண்முகம்
குறிப்பு : தண்ணீர் பிரச்சனையின் நாளது உண்மைகளை மேலதிகமாக புரிந்துகொள்ள பாரதிதம்பியின் “தவிக்குதே! தவிக்குதே!” (வெளியீடு : விகடன் பிரசுரம்) நூலைப் படிக்கலாம்.
No comments:
Post a Comment