ஐ.பி.எல் ‘திருவிழா’வுக்கு போட்டியாக “கேம்பஸ் இன்டர்வியூ அப்பாயிண்ட்மெண்ட வழங்கல் திருவிழா” நடத்திக் கொண்டிருக்கும் பொறியியல் கல்லூரிகளின் உண்மையான நிலை என்ன? அதை வைத்து அந்த கல்லூரியில் சேருவதற்கு இழுக்கப்படும் மாணவர்களின் மன நிலை என்ன? பொறியியல் கல்லூரிகள் குறித்து செய்திகளில், தொலைக்காட்சியில், வானொலியில், இணையத்தில், சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களாகவும், செய்திகளாகவும் வெளியிடப்படும் தகவல்களை எப்படி சரிபார்ப்பது?
“100% வேலை நிச்சயம்” என்று கொடுக்கப்படும் வாக்குறுதிகளின் நம்பகத்தன்மை என்ன?
“100% வேலை நிச்சயம்” என்று கொடுக்கப்படும் வாக்குறுதிகளின் நம்பகத்தன்மை என்ன? “கட் ஆப்” 180 வாங்கினால் டியூஷன் பீஸ் இலவசம் என்கிறார்களே இதன் பின்னணி என்ன? ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று கூவிக் கூவி விற்கும் அளவுக்கு இவர்கள் இறங்கி வந்தது ஏன்? யாரெல்லாம் இவர்களின் பணவேட்டைக்கு இரையாகிறார்கள் என்பதறிய சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள எஸ்.கே.ஆர், ராஜலட்சுமி, லொயோலா, டி.எம்.ஐ, பிரதியுஷா முதலிய பொறியியல் கல்லூரிகளுக்குச் சென்றோம்.
பிரதியுஷா கல்லூரியில் மூன்றாமாண்டு மின்னணு-தகவல் தொழில்நுட்பம் படிக்கும் ஏ. ஜவஹரிடம் பேசிய போது “அப்பா, அம்மாவுக்கு சென்னையில படிக்க வைக்கணும்னு ரொம்ப ஆசை! ஏன்னா தொழிற்துறை அனுபவம் நிறைய கெடைக்கும்; வேல தேடுவதும் ஈசி-ன்னு நெனச்சாங்க! அப்பத்தான் இந்தக் கல்லூரியில படிச்சிட்டுருந்த என்னோட சொந்தக்காரப் பையன் இங்க சேரலாமுன்னு சொன்னான்! அதான்! இங்க வந்து சேர்த்துட்டாங்க !”
“எங்களால யாரும் இந்தக் காலேஜுக்கு வந்துறக் கூடாது”
“எஸ்.ஆர்.எம் மாதிரி முன்னாள் மாணவர்களுக்கு கமிஷன் கொடுத்து ஆள் பிடிச்சு அட்மிஷன் போடுவது இங்கு உண்டா?”
”இருக்கு சார்! மேனெஜ்மெண்ட் கோட்டால 45% மார்க் வாங்குனவங்களுக்குக் கூட இங்க அட்மிஷன் உண்டு!!
“சரி இப்போ மூன்று வருடங்களுக்குப் பிறகு என்ஜினியரிங் படிப்ப பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க!”
“சார்! நானும் என்னோட நண்பர்களும் ஒரு சபதம் எடுத்துருக்கோம்! எங்களை இங்க கொண்டு வந்தவங்கள போல, எங்களால யாரும் இந்தக் காலேஜுக்கு வந்துறக்கூடாதுங்குறது தான் அது! இன்னும் சொல்லப்போனா யாரையும் என்ஜினியரிங் படிப்பு படிங்க-ன்னு சொல்ல மாட்டேன்! என்னோட தம்பி கூட இப்ப தான் +2 முடிச்சுருக்கான்! என்னடா தம்பி படிக்கப்போறன்னு கேட்டப்ப ‘அண்ணா நான் டிப்ளமோ கூட படிக்கப் போறதில்ல! அதுக்குப்பதிலா ஐ.டி.ஐ படிச்சு அத வச்சு பொழச்சுக்கப் போறேன்’னு சொன்னான்!…எனக்கும் அதுல எந்த பிரச்சினையும் இல்ல! சரிடான்னு சொல்லிட்டேன்” என்று பதிலளித்தார்.
“ஃபர்ஸ்ட் டைம் காலேஜுக்குள்ள நுழைஞ்சப்ப கல்லூரியோட ப்ரண்ட் லுக் அட்ராக்டிவ்வா இருந்துச்சு! ஹாஸ்டல்ல ஃப்ரண்ட்சுங்க கூட இதையே தான் பேசிக்கிட்டு இருந்தாங்க! ஹாஸ்டல் ரூம் மேட்ஸ் ஆந்திரா பையங்களா இருந்ததுனால கொஞ்சம் ஆங்கிலம் பேச கத்துகிட்டேன்! நானா இங்க வந்து ஓரளவுக்கு கத்துகிட்டதுன்னா ஆங்கிலம் மட்டும்தான்!”
“இப்ப கெடச்ச வேலையில யாருக்குமே திருப்தியில்ல! சம்பளமும் கம்மி, வேலயும் Voice Support வேல தான்!”
அன்று நடக்கவிருந்த “கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வான மாணவர்களுக்கு offer letter வழங்கும் நிகழ்ச்சி” பற்றி கேட்ட போது,
“சார்! மொதல்ல அவுங்கள்ள முக்காவாசிப்பேர், கேம்பஸ்-ல செலக்ட ஆனவங்களே கெடையாது! அவுங்கவுங்க சொந்த முயற்சியில் அலஞ்சு திரிஞ்சு off-campus-ல செலக்ட் ஆயிருக்காங்க! இதுக்கும் காலேஜுக்கும் எந்தத் தொடர்பும் இல்ல! அப்பறம் பாத்தீங்கன்னா இந்த புரோகிராமுக்கே நெறையா பேரு வருவாங்களாங்குறதே சந்தேகம் தான்! ஏன்னா! இப்ப கெடச்ச வேலையில யாருக்குமே திருப்தியில்ல! சம்பளமும் கம்மி, வேலயும் Voice Support வேல தான்! அதனால நெறையா சீனியருங்க வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க!”
“காலேஜ் வெப்சைட்டுல Industry Alliance-ன்னு போட்டு ஒரு 10 கம்பெனிங்க பேற போட்டுருக்காங்களே அந்த கம்பெனி எல்லாம் வேலைக்கு எடுப்பாங்களா?”
“அதுவா! அது ஒன்னும் இல்ல சார்! இப்போ IBM ஒரு இண்டஸ்டிரி அலையன்சுன்னு வெச்சுக்கங்களேன்! வருசா வருசம் IBM-லேர்ந்து டை, சூட்டு எல்லாம் போட்டுகிட்டு ஒரு ரெண்டு மூனு பேரு வந்து, Advance C, C++ -ன்னு மூனு நாளு க்ளாஸ் எடுப்பாங்க! அப்புறம் டெஸ்ட் வச்சு, சர்டிபிகேட் எல்லாம் கொடுப்பாங்க! அவ்ளோ தான்!
இதே போல விவேகானந்தா இன்ஸ்டிடியுட்டிலேருந்து ரெண்டு நாளா ட்ரெயினிங் குடுத்தாங்க! எப்படி கோபத்தை அடக்கிக்கணும், தோல்வி ஏற்பட்டா எப்படி சமாளிக்கணும்னு சொல்லிக் கொடுத்தாங்க! எதுக்குடா இதெல்லாம் சொல்லித்தராங்கன்னு அப்ப ஒண்ணுமே புரியல…இப்ப தான் நெலவரமே புரியுது!”
“முக்காவாசிப்பேர், கேம்பஸ்-ல செலக்ட ஆனவங்களே கெடையாது! அவுங்கவுங்க சொந்த முயற்சியில் அலஞ்சு திரிஞ்சு off-campus-ல செலக்ட் ஆயிருக்காங்க! இதுக்கும் காலேஜுக்கும் எந்தத் தொடர்பும் இல்ல!”
கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் குறித்துக் கேட்டபோது “அவுங்களுக்கு காசு தான் சார் முக்கியம், ரெண்டு மூனு மாசத்துக்கு ஒருவாட்டி எதையாவது கணக்குக் காட்டி ஆயிரமோ அல்லது இரண்டாயிரமோ புடுங்கிருவாங்க! ஸ்டூடண்ட்ஸ் நல்லா படிக்கிறாங்களா இல்லயா! இதெல்லாம் அவுங்களுக்கு ஒரு பிரச்சினையே இல்ல! Staff-ன்னு பாத்தீங்கன்னா சப்ஜெக்ட நடத்தி முடிச்சோமா, போனாமோ அவ்ளோதான்! லேப் வசதி இருக்கு! ஆனா ஒரு யூசும் இல்ல!
பாத்தீங்கன்னா ஒரு சீனியர் கஷ்டப்பட்டு ஒரு டிஜிட்டல் போர்டு டிசைன் பண்ணுனாரு, ஆனா காலேஜ் அத எப்புடி பாத்துச்சு தெரியுமா? இதனால எதாவது காலேஜுக்கு பேரு கெடைக்குமான்னு பாத்துச்சு, ஒன்னும் இல்லன்னு தெரிஞ்சதும் அப்படியே விட்டுருச்சு! இன்னொரு சீனியரு Borewell Child Rescue Robot-னு ஒன்னு பண்ணாரு, ஒடனே அதை பேப்பர்ல செய்தியா போட்டு விளம்பரம் தேடிக்கிட்டாங்க. இப்படி பண்ணுனா யாருக்கு மோட்டிவேஷன் வரும்?”
“இவ்வளவு பெரிய காலேஜா இருக்கே, விளையாட்டெல்லாம் உண்டா?”
“சார்!, விளையாட்டுக்கும் இந்தக் காலேஜுக்கும் ரொம்ப தூரம்! நான் முதல்ல காலேஜுக்கு வந்த போது பெரிய கிரவுண்ட் இருக்குறத பாத்து கிரிக்கெட்லாம் விளையாடலாம்னு ஜாலியா நெனச்சுட்டு இருந்தேன், ஆனா பாருங்க இங்க இருந்த கிரவுண்டுக்கு நடுவுல ஒரு நடைபாதைய போன வருசம் கட்டி விட்டாங்க! வெளையாட்டுக்குன்னு ஒரு டிபார்ட்மெண்ட் வேற ஒதுக்கிருக்காங்க! ஆனா கிரவுண்டே இல்ல பாருங்க!”
“படித்து முடித்து என்ன வேலைக்குப் போகப் போறீங்க”
“ஐ.டி-ல ஒரு பிரச்சினை இருக்கு சார்! வேணுங்குறப்ப பயன்படுத்திக்குவான்! அப்புறம் டெக்னாலஜி மாறிருச்சுன்னா வெரட்டி விட்ருவான்!”
“சார்! ஏற்கனவே வேலை பிரச்சினை இருக்குது! நான் டி.என்.பி.எஸ்.சி-க்கு தயாரிக்க ஆரம்பிச்சுட்டேன்! Core-ல வேலைக்குப் போனாலும் 8,000 ரூபாய் தான். ஐ.டி-ல வேலைக்குப் போனாலும் அதே காசு தான்! இத வச்சு கட்டுன பணத்த எடுக்க முடியுமா? இல்ல மிச்சம் தான் பண்ண முடியுமா? ஐ.டி-ல ஒரு பிரச்சினை இருக்கு சார்! வேணுங்குறப்ப பயன்படுத்திக்குவான்! அப்புறம் டெக்னாலஜி மாறிருச்சுன்னா வெரட்டி விட்ருவான்! அதனால ஐ.டி கம்பெனி வேலைக்குப் போகவே மாட்டேன்…..
இத வுட இன்னொரு விசயம் சொல்லுறேன் கேளுங்க! ரெண்டு வருசத்துக்கு முன்னாடி எங்க சொந்தக்கார பையன் வேற ஒரு காலேஜுல மின்னணு-தகவல் தொழில் நுட்பம் முடிச்சிட்டு இன்ஃபோசிஸ் கேம்பஸ்-ல செலக்ட் ஆனாரு… அவுங்க வீட்டுல எல்லாருக்கும் பையனுக்கு வேல கெடச்சுருச்சுன்னு ரொம்ப சந்தோசம்!
சென்னையில தான் வேலன்னு சொல்லி ஆஃபர் லெட்டர் கொடுத்தாங்க! ஆனா வேலைக்கு சேந்தவுடனே மைசூருல ட்ரெயினிங்-னு அனுப்பி வெச்சுட்டாங்க! ஸ்டார் ஹோட்டல் மாதிரி தங்குற வசதியெல்லாம் இருந்துச்சுன்னு ஒரே ஜாலியா இருந்திருக்காப்புல! மொத்தமா 200, 300 பேரு எல்லா ஸ்டேட்லேர்ந்தும் செலக்ட் ஆனவங்க எல்லாரும் இருந்தாங்களாம்! அப்பறந்தான் எமகண்டம் ஆரம்பிச்சிருக்கு! ஆப்டிடியூட், ஜி.டி, காம் ஸ்கில் (அதான்! கம்யூனிகேசன் ஸ்கில்) இண்டர்பெர்சனல் ஸ்கில்-னு ஒரு மாசமா டெஸ்டா வெச்சுத் தள்ளி கடைசில 50, 60 பேர அன்குவாலிஃபைடு-ன்னு சொல்லி வேலய விட்டே போகச் சொல்லிட்டாங்க!, ரொம்ப மனசு ஒடஞ்சு போயி இந்த வருசம் தான் ஒரு சின்ன கம்பெனில செட்டில் ஆயிருக்காரு! அப்பவே முடிவு பண்ணிட்டேன், இவிங்க சங்காத்தமே வேணாமுன்னு!”
“உங்க பெற்றோருடைய எதிர்பார்ப்பெல்லாம் எப்படிப்பா இருக்குது”
“எனக்கு தெரிஞ்சவங்க யாராவது பி. இ. படிக்கனும்னு சொன்னாங்கன்னா, அவங்க கைகால்ல விழுந்து சேராதீங்கனு சொல்வேன்!”
“அவுங்க பாவம் சார்! எப்படியாவது யாரப் புடிச்சாவது வேலை ஒன்னு வாங்கித்தரணும்னு நினைக்கிறாங்க! அதுக்கு மேல அவுங்களுக்கு ஒன்னும் தெரியாது…அவ்ளோ தான்”
அதே கல்லூரியில் சிவில் இறுதியாண்டு படிக்கும் ஜெயன் பேசுகையில்.. ”சிவில் என்ஜினிரியங் முடிச்சா இங்கெல்லாம் இப்போ 7,000 ரூபாதான் தர்ராங்க! அப்ராடு போனாத்தான் சம்பாதிக்க முடியும். அதுக்கும் எக்ஸ்ட்ரா கோர்ஸ் படிக்கனும். ஏற்கனவே நெறயா என்ஜினியரிங் படிச்சவங்க இருக்கதால ஃபயர் சேஃப்ட்டி கோர்ஸ் படிச்சிட்டு வந்தா தான் வேலை தேடமுடியும்னு அங்கு போன சொந்தக்காரங்க சொல்றாங்க! அதுக்கு ஒரு வருட செலவு 1லட்சம் ஆகும்.” என்றார், வெள்ளேந்தியாக….
மெக்கானிக்கல் இன்ஜினியரிங், இறுதியாண்டு படிக்கும் தீபன் சக்கரவர்த்தி கூறுகையில்….”எங்க காலேஜ் பி கிரேடு., இந்த வருசம் எங்க பேட்சுலேருந்து 3 பேர்கூட 30,000 சம்பளத்தில கேம்பஸ்ல செலக்ட் ஆவல! போன வருசம், ஆண்டுக்கு 6 லட்சம் சம்பளம்னு வந்த கேம்பஸ் இண்டர்வியூல யாருமே செலக்ட் ஆவல. 30 மார்க்குக்கு வெறும் 7 பேர், 13 மார்க்தான் எடுத்தாங்க! கேட்டா, ஆட்டீடியுடு, பெர்ஃபாமன்ஸ், ஃபோக்கஸ் எதிர்ப்பார்த்த அளவு இல்லன்னு சொல்லிட்டாங்க!”
ராஜலட்சுமி கல்லூரியில் தேர்வு நடந்து கொண்டிருந்ததால் அரியர் எழுத வந்த இறுதியாண்டு படிக்கும் மாணவர்களைச் சந்தித்தபோது கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் பிரகாஷ் ”இன்ஜினிரிங் படிச்சா இப்ப ஸ்கோப் இல்ல! பி.காம், சிஏ, சீசன்! இது படிச்சா இப்ப வேலை ஈசியா கிடைக்கும்னு சொல்றாங்க, எங்க அம்மா, படிப்ப முடிடா, முடிடானு சொல்றாங்க! படிப்ப முடிச்சாக்கூட வேலையில்லைனு அவங்களுக்கு தெரியுமா?” என்று வேதனையுடன் சிரித்தார்.
“எனக்கு தெரிஞ்சவங்க யாராவது பி. இ. படிக்கனும்னு சொன்னாங்கன்னா, அவங்க கைகால்ல விழுந்து சேராதீங்கனு சொல்வேன்!” என்றார்
லொயோலா என்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாமாண்டு ECE படிக்கும் சோழன் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். பெற்றோர் விவசாயிகள். முதல் தலைமுறை பட்டம் வாங்குபவராக இருப்பதால் ஆண்டுக் கட்டணத்திலிருந்து 20,000 வரை கழித்துக் கொள்வார்கள். முதல் வருடம் ஹாஸ்டலில் தங்கியுள்ளார், ஆனால் கட்டணம் 54,000 ரூபாயாக இருந்ததால் இரண்டாமாண்டிலிருந்து வெளியில் தங்கி விட்டதாகவும் கூறினார்.
கல்லூரி அனுபவம் குறித்துக் கூறுகையில் “ இன்ஜினியரிங் படிக்கப் போறோம், அதனால நல்லாப் படிக்கனும்னு நெனச்சுத்தான் வந்தேன்! ஆனா இங்க அதுக்கான வாய்ப்புக்கள் எதுவும் இல்ல! லேப்-ல குறைந்தபட்ச அடிப்படை வசதி கூட இல்ல! மேடம்கிட்ட நானும் நெறைய கேள்வி கேட்பேன், ஆனா மேடம் அப்புறம் சொல்லுரேன்னு ஒதுங்கிக்குவாங்க! தியரி படிக்கிறதுன்னா நாங்க ஏன் இவ்ளோ பணம் கட்டனும்? அத வீட்டுலேயே ஒக்காந்து படிச்சுக்கலாம்ல!”
“80% பாடம் ப்ராக்டிக்கல்ஸ்-ல தான் இருக்கு! இங்க தான் அப்படின்னா! எல்லா காலேஜுலேயும் இப்புடித்தான்! 20% தியரி படிக்கிறதுக்கா நாங்க இத்தன தூரம் வந்திருக்கோம்??…எங்க அப்பா அம்மாவுக்கு இதெல்லாம் நான் எப்படி புரிய வெக்க முடியும்….! ஆமா நீங்க எதுக்கு இதெல்லாம் கேக்குறீங்க??” என்றார்.
எதிர்காலம் குறித்துக் கேட்டபோது, “சீனியர்களுக்கே வேலை கிடைக்க மாட்டேங்குது, அதனால அவுங்ககிட்ட உதவியும் கேட்கமுடியாது. கோர்-ல எங்கயும் வேலையே இல்ல! ஐ.டி-ல போகலாம்னா வெறும் B.P.O. வேலையாத் தான் வருது, இப்படித் தெரிஞ்சிருந்தா +2 முடிச்சவுடனே அந்த வேலைக்காவது போயிருக்கலாம். அப்பா அம்மாவுக்கு காசாவது மிச்சமாயிருக்கும்.” என்றார்.
இரண்டாமாண்டு மெக்கானிக்கல் படிக்கும் சில மாணவர்களைப் பார்த்த போது, கெஸ்டர் என்பவர் “அங்கிள் நாங்க ப்ரொஃபஷெனல் கோர்ஸ் அப்படின்னு நெனச்சு தான் என்ஜினியரிங் ஜாயின் பண்ணுனோம்! ஆனா நாங்க சூஸ் பண்ண காலேஜ் வேஸ்ட்! இன்ப்ராஸ்டரக்சரும் கெடையாது! பாதி எக்ஸ்பெரிமெண்ட்ஸ் வேலையே செய்யாது! போதுமான ஸ்டாபும் இல்ல! ஒரு டேர்ம்-க்கு 2 லெக்சரர்ஸ் வரணும், அதுல நடுவுல ஒருத்தர் வரவேயில்ல! இன்னொருத்தர் கடைசி வாரம் தான் வந்தாரு! இன்னக்கி அந்த பேப்பரோட அரியர் தான் எழுதிட்டு வர்றோம்! கேம்பஸ்-க்கு வர்றவன் அரியர் இல்லாதவங்க மட்டும் தான் வேணும்னு கண்டிசன் போடுறான்! கடைசியில நாங்க ஒழுங்கா படிக்காம அரியர் வச்சதுமாதிரி பழி என்னமோ எங்க மேல தான் விழுது!”
எஸ்.கே.ஆர் பொறியியல் கல்லூரியில் “அட்மிசனா சார்!” என்ற கேட்டபடியே வாட்ச்மேன் வரவேற்க உள்ளே நுழைந்தோம். அலுவலகத்தில் ஒரு பெண்மணி ”சார்! எந்த பிரான்ச் வேணும்” என்றவுடன் “EEE வேண்டும்” என்றோம்.
எஸ்.கே.ஆர் பொறியியல் கல்லூரி
உடனை ஒரு படிவத்தைக் கொடுத்து நிரப்பச் சொல்லி அந்தத் துறை டீனிடம் கூட்டிச் சென்றார்.
“குட்மார்னிங் சார்! நான் தான் இந்தத் துறையின் டீன், எங்க டிபார்ட்மெண்டுல 100% ஜாப் அஷ்யூரன்ஸ் இருக்கு சார்! டொனேசன் வாங்க மாட்டோம், பாருங்க இன்னக்கி தினத்தந்தில கூட நியூஸ் வந்திருக்கு! எங்க எம்.டி-க்கு நல்ல ஸ்டூடண்ட்ஸ் வேணும் அவ்ளோ தான் சார்! ஏழப்புள்ளங்கன்னா இன்னும் சலுகையெல்லாம் கொடுப்பாரு! பாத்தீங்கன்னா, விசு அரட்டை அரங்கத்துல நல்லா பேசுன ஏழைப் பெண்ணுக்கு எங்க காலேஜிலேயே இலவசமா சீட்டு கொடுத்தாரு
எங்க சிலபஸ் பாத்தீங்கன்னா பெஸ்ட் ஸ்டாண்டர்டா இருக்கும், மனப்பாடம் பண்ணி அப்படியே எழுத முடியாது! எல்லா புக்ஸும் ஃபாரீன் ஆதர்ஸ் தான்! எங்க இன்ஸ்டிடியூசனுக்கு ஃபாரீன்லேர்ந்து நெறையா அப்ரிசியேசன் வந்துருக்கு சார்! நீங்க இங்க தாராளமா படிக்க வைக்கலாம்! ஆமா….கட் ஆஃப் எவ்ளோ சார் இருக்குது?”
177 என்று சொன்னதும் உடனே ஒரு பேப்பர எடுத்து ஒர்க் அவுட் செய்து, “சார் டியூசன் பீஸ் இங்க 45 ஆயிரம் தான்! அப்பறம் பையன் ஃபர்ஸ்ட் ஜெனரேசனா?” என்று கேட்டு விட்டு, “அப்படீன்னா ஒரு 20,000 ஆயிரம் கவர்மெண்ட் ஸ்காலர்ஷிப் உண்டு, அப்பறம் நல்ல கட் ஆஃப் இருக்கதுனால இன்னொரு 20,000 டிஸ்கவுண்ட் தர்ரோம், ஃபைனலா 5,000 கட்டினா போதும், மத்த ஃபீசெல்லாம் ஸ்டாண்டர்டா உள்ளது தான்” என்று டீல் பேசி முடித்தார். என்னது ஐயாயிரத்தில் ஒரு பொறியியல் படிப்பா என்று ஆச்சரியம் மேலிட்டால், நாம் அவர்கள் விரித்த வலையில் விழுந்து விட்டோம் என்று பொருள்.
கல்வி வியாபாரமாகி, வியாபாரிகள் லாபம் குவித்துக் கொண்டிருக்க இலட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை தொலைத்துக் கொண்டு நிற்கின்றனர். அவர்களது குடும்பங்கள், தங்களது கொஞ்ச நஞ்ச சொத்துக்களையும் விற்று, அல்லது வங்கிக் கடன் வாங்கி இந்த தனியார் கல்வி முதலாளிகளின் பைகளை நிரப்புகின்றனர்.
ஓரிரு வருடங்களில் அந்த மாணவர்கள் இந்த மர்மக் கோட்டையை புரிந்து கொள்வார்கள்.
“தனியார் வந்தால்தான், எஃபிசியன்ட், செலவு குறையும், தரம் உயரும்” என்று சொன்ன தனியார்மய தாசர்களும், தனியார் கல்வி முதலைகளுக்கு படையல் போட்ட அரசுகளும் இப்போது தமது பொறுப்பை கைகழுவி விட்டு சந்தை, திறன் மேம்படுத்தல், சுய நம்பிக்கை என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.
இறுதியில் இந்த பொறியியல் கல்லூரிகளால் யாருக்கு லாபம்? நடுத்தர வர்க்கமும், ஏன் சாதாரண மக்களும் கூட தமது ஆயுட்கால சேமிப்பு அல்லது குடும்ப சொத்தை விற்று தீர்க்கிறார்கள். இவர்களிடமிருந்து இப்படிக் கொள்ளையிடுவதற்கென்றே இந்த சுயநிதிக் கல்லூரிகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. மற்றொரு புறம் இந்த மாற்றம் ஏற்படுத்தும் சமூக ரீதியான பாதிப்புகள் தனி. இருப்பினும் ஊடகங்களும், அரசும் இந்தக் கொள்ளையை வருடந்தோறும் ஆராதித்தே வருகின்றன.
நாங்கள் திரும்பும் போது இந்த பிரச்சாரத்தை நம்பி கிராமத்திலிருந்து பையனை அழைத்துக் கொண்டு எதிர்கால கனவுகளுடன் வினோத மர்மக் கோட்டைக்குள் நுழையும் முக பாவனையுடன் பெற்றோர்கள் நுழைந்து கொண்டிருந்தனர். ஓரிரு வருடங்களில் அந்த மாணவர்கள் இந்த மர்மக் கோட்டையை புரிந்து கொள்வார்கள். ஆயினும் அதை சில இலட்சங்கள் செலவழித்துத்தான் அறிய வேண்டுமா?