‘மருத்துவர்கள் அத்தனை பேருமே நல்லவர்கள்தான், நாம் அவர்களைத் தேடிச் செல்லாத வரையில்...’ என்றொரு நகைச்சுவைப் பொன்மொழி உண்டு.
நகைச்சுவையாக சொல்லப்பட்டாலும், நிஜமும் அப்படித்தான் இருக்கிறது என்பதுதான் வேதனை. பேப்பர் போடுகிறவர் முதல் காய்கறி வியாபாரி வரை அத்தனை பேரையும் கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்டுக் குடைந்தெடுக்கிற பலருக்கும், மருத்துவர்களிடம் பேச மட்டும் ஏனோ அப்படியோர் மிரட்சி. பெரும்பாலான மருத்துவர்களிடம் சந்தேகங்கள் கேட்கக் கூடாது, எதிர்க்கேள்வி கேட்டாலோ போச்சு... ‘நீ டாக்டரா, நான் டாக்டரா...’ என்கிற ஏளனமான பதிலுக்குத் தலைகுனிய வேண்டும்.
என்னதான் நடக்கிறது? மருத்துவர்களிடம் கேள்வி கேட்பது அத்தனை பெரிய தவறா? தனக்கு வைத்தியம் பார்க்கிற மருத்துவரிடம் நோயாளி அவசியம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? மருத்துவர் பதில் சொல்ல மறுத்தால் என்ன செய்வது?
சாமானிய மக்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைத் தெளிவுப்படுத்துகிறார் மருத்துவரும் சமூக ஆர்வலருமான புகழேந்தி.
‘‘‘நோயாளியின் துணை இல்லாமல் எந்த மருத்துவரும் ஒரு நோயைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது’ என்கிறார் நவீன மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படுகிற வில்லியம் ஆஸ்லர். நோயாளி இல்லாமல் மருத்துவம் படிப்பதென்பது, அந்த மருத்துவருக்கு திசை தெரியாத நடுக்கடலில் பயணிப்பதற்குச் சமம். ஆனால், பல மருத்துவர்கள் அதை உணர்வதில்லை. டாக்டரிடம் எப்படிக் கேள்வி கேட்பது, கேட்டால் என்ன பதில் சொல்வாரோ? திட்டினால்? பாதி சிகிச்சையோடு விரட்டினால்... நோயாளிகளுக்கு இப்படி எல்லாவற்றுக்கும் பயம். பிரச்னை இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.
இந்த இடத்தில் காந்திஜி சொன்ன ஒரு விஷயத்தை வலியுறுத்த விரும்புகிறேன். ‘என் உடல்நலன் மீது எனக்கு அக்கறை அதிகமா? இன்னொருவருக்கா?’ என்றார். அதன்படி பார்த்தால் மருத்துவரைவிட, நோயாளிக்குத்தானே தன் உடல் மீது அக்கறை அதிகம்? தனக்கிருக்கிற பிரச்னையைப் பற்றி, அதன் அறிகுறிகள் பற்றி சொல்வது மட்டும்தான் நோயாளியின் வேலை. அதன் பின்னணியில் உள்ள டெக்னிகல் விஷயங்களைக் கண்டுபிடித்து, நோயாளிக்குச் சொல்வது மட்டுமே மருத்துவரின் கடமை. அதன் தொடர்ச்சியாகப் பரிந்துரைக்கப்படுகிற சிகிச்சையைப் பற்றி முடிவெடுப்பது முழுக்க முழுக்க நோயாளியின் உரிமை மட்டுமே. சட்டமும் அதையே சொல்கிறது. ஆனால், யதார்த்தம் அப்படியிருப்பதில்லை.
என் அம்மாவை கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அறுவை சிகிச்சைக்கு முன்பாக ஒரு படிவத்தில் என்னைக் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். எதிர்பாராத விதமாக ஏதேனும் பிரச்னைகள் வந்தால், மருத்துவரோ, மருத்துவமனை நிர்வாகமோ பொறுப்பில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மயக்க மருந்து கொடுக்கும் போது 2 விதங்களில் பிரச்னை வரலாம். மருத்துவர் சரியான அளவு கொடுத்து, நோயாளியின் உடல் அதற்கு வேறு மாதிரி ரியாக்ட் செய்தால், அது மருத்துவப் புறக்கணிப்பில் வராது. ஆனால், மயக்க மருந்தின் அளவைக் கூட்டிக் கொடுத்து, அதனால் பிரச்னை வந்தால், அது மருத்துவப் புறக்கணிப்பின்றி வேறென்ன? நீங்கள் சரியான அளவு மயக்க மருந்துதான் கொடுக்கிறீர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? எனவே, அந்த வரிகளை படிவத்தில் இருந்து நீக்குங்கள் என்று வாதாடினேன்.
கையெழுத்து போடாவிட்டால் அறுவைசிகிச்சை செய்ய முடியாது என்றார்கள். பெரும்பாலான கண் மருத்துவமனைகளில் இப்படித் தான் நடக்கிறது. சமீபத்தில் மறுபடி என் அம்மாவை வேறொரு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றேன். சிறுநீரகச் செயல்பாட்டைக் கண்டுபிடிக்க சில டெஸ்ட்டுகள் எடுக்கச் சொன்னார்கள். ரத்தம், யூரியா மற்றும் சீரம் கிரியாட்டினின் என எல்லாம் எடுக்கச் சொன்னார்கள். சிறுநீரகச் செயல்பாட்டை யூரியா டெஸ்ட்டைவிட சீரம் கிரியாட்டினின்தான் துல்லியமாகச் சொல்லும். அப்படியிருக்கும் போது எதற்கு அனாவசியமாக இரண்டு டெஸ்ட்டுகள் எனக் கேள்வி எழுப்பினேன்.
பதில் இல்லை. புகார் எழுதிப் போட்டிருக்கிறேன். அதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. விஷயம் தெரிந்த ஒரு மருத்துவரான எனக்கே இந்த நிலைதான்.
போலியோ சொட்டு மருந்து கொடுத்தால் போலியோ வராது என விளம்பரப்படுத்துகிறார்கள். ஆனால்,போலியோ சொட்டு மருந்து கொடுத்த பிறகும் போலியோ வரும். அதற்குப் பெயர் ‘வேக்சின் டிரைவ்டு போலியோ’. (vaccine derived polio) அதைப் பற்றி யாரும் சொல்வதில்லை. எல்லாவிதமான தடுப்பூசி மருந்துகளிலும் thiomersal என்கிற ஒரு ப்ரிசர்வேட்டிவ் சேர்க்கிறார்கள். அந்த ப்ரிசர்வேட்டிவின் விளைவால் ஆட்டிசம் (AUTISM) வருவதாக அமெரிக்காவில் அதைத் தடை செய்து விட்டார்கள்.
இந்தியாவிலோ அப்படி எந்தத் தடையும் இதுவரை இல்லை. ஒரு தடுப்பூசியைப் போட்ட பிறகு போலியோ வராது என்றோ, ஆணுறை உபயோகித்தால் எய்ட்ஸ் வராது என்றோ அமெரிக்காவில் யாரும் விளம்பரப்படுத்த முடியாது. ஆனால், நம்மூரில் கல்வியின் தரமும் சமூக நிலையும் அரசியல் ஆதிக்கமும் இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது. ஒரு மருந்தின் சாதக, பாதகங்களைத் தெரிந்து கொள்ளும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அதைத் தெரிந்து கொண்டு அதை எடுப்பதா, விடுப்பதா என முடிவு செய்ய வேண்டியது அவரவர்தான்.
என்னுடைய மருத்துவ நண்பர் ஒருவரிடம் ஒரு குழந்தையைத் தூக்கி வந்து காட்டினார்கள். அந்தக் குழந்தைக்கு உடல் முழுக்க தடிப்பு. உடனே என் நண்பரான அந்த மருத்துவர், நான்கு மாத்திரைகள், ஒரு ஊசி, ஒரு ஆயின்மென்ட், ஒரு சோப் எல்லாவற்றையும் பரிந்துரைத்தார். அடுத்த நாளே அந்தக் குழந்தைக்கு எல்லாம் சரியாகிவிட்டது. அந்தக் குழந்தையின் அலர்ஜி பிரச்னைக்கு ஒரே ஒரு மாத்திரை மட்டும் போதும் என்பது எனக்குத் தெரியும். மாத்திரையால்தான் குணமானது என்பது தெரியாமல், அவர் எழுதிக் கொடுத்த ஆயின்மென்ட்டும், சோப்பும்தான் காரணம் என அவர்கள் நினைப்பார்களே... அதுதான் வணிக தந்திரம்.
இன்னொரு மருத்துவ நண்பர்... அவரிடம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர், ஆலோசனைக்கு வருகிறார். உணவுக் குழாயில் எரிச்சல் என்பது அவரது புகார். இந்த அறுவை செய்தவர்களுக்கு பொதுவாக ஸ்டீராய்டு மருந்துகள் கொடுப்பார்கள். அதன் விளைவுதான் அவருக்கு உணவுக்குழாயில் உண்டான எரிச்சல். அதற்கு சாதாரண மருந்து போதும். ஆனாலும், என் நண்பர் இசிஜி செய்யச் சொல்லி எழுதிக் கொடுத்தார். அதைப் பற்றி நான் கேட்ட போது, ‘அட நீ வேறப்பா... நான் பிரைவேட் ஆஸ்பத்திரியில வேலை பார்க்கறேன். அவங்க பெரிய காசு போட்டு இசிஜி மெஷின் வாங்கிப் போட்டிருக்காங்க. நான் எழுதிக் கொடுக்கலைனா, என்னை வேலையை விட்டுத் தூக்கிடுவாங்க’ என்ற போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மக்கள் எவ்வளவு பாவம் பாருங்கள்...
தனக்குப் பரிந்துரைக்கப்படுகிற
மருந்துகளில்,
சோதனைகளில்
சோதனைகளில்
- எதெல்லாம் தேவையில்லாதது,
- எது அவசியமானது,
- விலை குறைவான மருந்துகள் இருக்கின்றனவா,
- மருந்துகளின் சாதக, பாதகங்கள் என்னென்ன
என எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியது நோயாளிகளின் உரிமைகள். சரியான பதில் கிடைக்காவிட்டால் தைரியமாகப் போராடுங்கள்.
வைரஸ் காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொடுக்கக் கூடாது. ஆனால், நம்மூரில் எல்லாக் காய்ச்சலுக்கும் ஆன்டிபயாடிக்தான். தேவையில்லாத மருந்துகளைப் பரிந்துரைக்கிற கொடுமை இந்தியாவில் மட்டுமே நடக்கிறது.
அதே மாதிரி சாதாரண, விலை மலிவான மருந்துகளிலேயே சரியாகக் கூடிய பிரச்னைக்கு, எக்கச்சக்க விலையுள்ள மருந்துகளைப் பரிந்துரைக்கிற அக்கிரமமும் இங்கேதான் நடக்கிறது.
‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்றும், அதியமான் ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்த கதையும் படித்திருக்கிறோம். அவை எதுவுமே அபத்தமில்லை. நெல்லிக்காயில் அதிகளவு வைட்டமின் சி இருக்கிறது. அது நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுத்து, ஆயுளைக் கூட்டும் என்பதும் அறிவியல்.
அரிசி உணவுகளைத் தவிர்த்து, சிறுதானிய உணவுகளைச் சேர்த்துக் கொண்டால் 40 சதவிகித நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம் என்பது உண்மை.
ஆனால், எந்த மருத்துவராவது இதையெல்லாம் நோயாளிகளுக்குச் சொல்கிறாரா? மருத்துவரின் வேலை, நோயைக் குணப்படுத்துவதா? தடுப்பதா?
வியாதி வந்தால் மருத்துவமனைக்குப் போ, மருத்துவரைப் பார், மருந்து சாப்பிடு... இதுதான் எழுதப்படாத விதியாக இருக்கிறது.
- காற்றோட்டமான இடமும்
- சுத்தமான, சத்தான சாப்பாடும்,
- செருப்புகள் தவிர்க்காத கால்களும்
நோய்களில் இருந்து காப்பாற்றும் என எந்த மருத்துவர் பிரச்சாரம் செய்கிறார்?
நடக்கும் பிரசவங்களில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானவை சிசேரியன். அவசரமான தருணங்களில், தாயையும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டிய கட்டத்தில் மட்டும்தான் சிசேரியன் அவசியம். ஆனால், ஏதேதோ காரணங் களைச் சொல்லி, பல மருத்துவர்களும் சிசேரியனை வலியுறுத்துகிறார்கள். அதற்கு சம்மதிப்பதற்கு முன், சிசேரியன் ஏன் தேவை என்பதற்கான ஆதாரத்தைக் காட்டும்படி மருத்துவரிடம் கேட்க வேண்டும். எத்தனை பேர் கேட்கிறீர்கள்? இனியாவது கேளுங்கள்.
மருத்துவம் படிக்கிற பலரும், பெரிய பணத்தை செலவழித்துப் படிப்பதால், அதை எத்தனை சீக்கிரம் திருப்பி எடுப்பது என்பதில்தான் கவனமாக இருக்கிறார்கள்.
- மருத்துவருக்கும் நோயாளிக்குமான இடைவெளி நிரப்பப்பட வேண்டும்.
- ஸ்டாண்டர்டு மெடிக்கல் ட்ரீட்மென்ட் என்பது இங்கே சட்டமாக்கப்பட வேண்டும்.
- ஒரு மருந்து பாதுகாப்பானதுதானா, இல்லையா என்பதை அரசியல்வாதிகள் தீர்மானிக்கிற அநியாயம் நிறுத்தப்பட வேண்டும்.
- மருத்துவத் துறையில் வணிக நலன் தூக்கி எறியப்பட்டு, மக்கள் நலன் முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.
- கேள்வி கேட்கும் அறிவை மக்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
- எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவர்கள் அனைவரும் மனசாட்சிக்குப் பயந்து நடக்க வேண்டும்.
உயிரைக் காப்பாற்றும் உன்னதப் பணியில் இருப்பதை மறக்காமல், மருத்துவத்தை நிஜமான சேவையாக நினைத்துச் செய்ய வேண்டும். சட்டமும் அதைத்தான் சொல்கிறது...’’
No comments:
Post a Comment